Tuesday, March 15, 2011

ஆடுகளம் ---- பொறாமை பல்லின் விஷம்.


சோசியல் போபியாவினால் வழக்கம் போல் ஆடுகளம் படத்தையும் விடியோவிலேயே பார்க்க நேர்ந்தது. படத்தயாரிப்பாளரும் , படைப்பாளியும் மன்னிப்பார்களாக. இந்த ப்ளொக்கில் வணிகப்படங்களை பற்றிய என்னுடைய விமர்சனங்களை எழுதுவதில்லை என்ற முடிவிலிருந்து என்னை மீரா செய்த இரண்டாவது படம் ஆடுகளம்.முதல் படம் மைனா.

நான் இதுவரை பார்த்த தமிழ் சினிமாவிலேயே ; தமிழ் சினிமாவின் பிதாமகர்களின் சினிமாவை விட மிக அற்புதமான படம் ஆடுகளம்.பேட்டைக்காரன் (வ.ஐ.ஜெயபாலன்) சேவல் சண்டையில் நிபுணத்துவம் பெற்றவர்.தனது வாழ்க்கையையே சேவல் சண்டைக்காக அர்பணித்தவர். அவரின் சிஷயர்களாக  கருப்பு (தனுஷ்), துறை முதலியோர் இருக்கின்றனர். பேட்டைக்காரனின் சேவல் சண்டை எதிரியான போலிஸ் இன்ஸ்பெக்டருக்கும் , பேட்டைக்காரனுக்கும் இடையே சேவல் சண்டை நடக்கிறது.அதில் இன்ஸ்பெக்டரின் இரு சேவலிடம் மோத கருப்பு ஒரு சேவலை தேர்ந்தெடுக்கிறான். பேட்டைக்காரன் அந்த சேவலை மறுத்து அது தோற்றுவிடும் என்றும் வேறு சேவலை போட்டியில் ஈடுபடுத்துமாறு கூறுகிறார்.கருப்பு அதைமீறி தான் முதலில் தேர்ந்தெடுத்த சேவலையே சண்டைக்கு விட்டு ஜெயித்துவிடுகிறான்.

இது பேட்டைக்கரனுக்கு அவமானமாகி விடுகிறது.தன்னுடைய சிஷ்யன் தன்னைவிட திறமைசாலியாக இருப்பதை பேட்டைக்காரனின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பொறாமையால் பேட்டைக்காரன் தத்தளிக்கிறான்.ஆனால் கருப்பு 
தனது வெற்றிகளுக்கெல்லாம் தனது குருவான பேட்டைக்காரனே காரணம் என்று மனதார சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

தனது மனதில் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பேட்டைக்காரன் கருப்பின் மீது ஏக கடுப்பில் இருக்கிறான்.பல வஞ்சக செயல்கள்;துரோகங்கள் மூலம் கருப்புவை பலி வாங்குகிறான். பேட்டைக்காரனின் சூழ்ச்சியை கடைசியில் தெரிந்து கொண்ட கருப்பு பெட்டைக்கரனை பார்த்து,''ஏன் இப்படி செய்தாய்?.எனக்கு அப்பா இல்லை.உன்னை என் அப்பாவின் ஸ்தானத்தில் வைத்துள்ளேன்.என்று கூறியவுடன் பேட்டைக்காரன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போகிறான்.

கருப்பு தனது காதலியிடம் '' பேட்டைக்காரனின் சூழ்ச்சியை நான் யாரிடமும் கூறப்போவதில்லை. பேட்டைக்கரனை கொலை செய்தது நான்தான் என்று ஊர் நம்பிக்கொண்டிருக்கிறது.அப்படியே இருக்கட்டும் பேட்டைக்கரனின் பெயருக்கு  களங்கம் வரவேண்டாம்''என்று கூறுவதோடு படம் முடிகிறது.

எந்த துறையாக இருக்கட்டும் தனக்கு கீழுள்ளவர்கள் தன்னைவிட உயரத்திற்கு வரும் பொழுது அனைவர் மனதிலும் ஒரு துளியேனும் பொறாமை தீ எட்டிப்பார்க்கும்.என்ன செய்வது எத்தனை பேர் தங்கள் மனதில் பொறாமை இல்லாமல்  இருக்கிறார்கள்?.தான் பெற்ற மகனே தன்னை விட அதிகம் சம்பளம் பெறும் போது சிறிதளவேனும் பொறாமை படாதவர்கல்  இருக்கிறார்களா என்ன?.மனித மனம் எத்தகையது?. அதை எப்படித்தான் புரிந்துகொள்வதோ?.

பேட்டைகாரனிடம் கருப்பு  தான்  வெற்றி பெற்ற   பரிசு தொகையை சமர்ப்பிக்கும் பொழுது பேட்டைக்கரனின் மனம் வேறு ஒரு அவதாரம் எடுக்கிறது.இவன் தனக்கு கீழானவன் , சின்ன பையன்,இவன் ஜெயிச்ச தொகையை நாம் வாங்கக்கிக்கொள்வதா ?. என்று பேட்டைக்காரனின் மனம் தடுக்கிறது.அப்பொழுது பேட்டைக்கரனின் மனதில் தடை ஏற்படுத்தும் எது?. தன்மானமா? பொறாமையா?. ஆற்றாமையா?.

இதுவரை தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களின் மன இருளை துல்லியமாக சொல்லியபடம் எனக்கு தெரிந்து வேறில்லை. படம் தொடங்கி அரைமணி நேரம் என்னடா படம் இது?.கத்துக்குட்டிதனமான நடிப்பாக இருக்கிறதே?. என்றுதான் எண்ணியிருந்தேன்.முதல் அரைமணி நேரம் அனைத்து நடிகர்களின் நடிப்பும் மகா கேவலமாக இருந்தது.பிறகுதான் படம் அதற்கு நேர் எதிர் நிலையை எடுத்தது.

எனக்கு படத்தின் இசை சுத்தமாக பிடிக்கவேயில்லை.கேட்க மிகவும் எரிச்சலாக இருந்தது.இதற்கு நான் குறை சொல்ல  மாட்டேன்.இசையில் நுண்ணிய பிழைகள் இருந்தால் மட்டுமே இசையமைப்பாளர்கள் பொறுப்பாக முடியும்.மொத்தமாகவே படத்திற்கு பொருந்தாமல் இருக்கின்ற இசைக்கு படத்தின் இயக்குனரே பொறுப்பாவார்.

படம் மிகசிறந்த இலக்கியத்தை படித்தால் உண்டாகும் மன நெகிழ்ச்சியை தருகிறது. வெற்றிமாறனை பற்றி இணையத்தில் தேடிய பொழுது அவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் சீரியலுக்காக நூற்றுக்கணக்கான சிறுகதைகளை  படிக்கநேர்ந்தது.என்று தெரிந்து கொண்டேன்.வெற்றி மாறன் இப்படியொரு நல்ல படத்தை கொடுக்க காரணமாக அமைந்தது அவரது அந்த வாசிப்பே என்பதை உணரமுடிகிறது.  

ஆடுகளம் பார்த்ததுமே வெற்றிமாறனின் முதல் படைப்பான பொல்லாதவனை பார்த்த்துவிட வேண்டும். என்ற எண்ணம்  மேலோங்கி விட்டது.மேலும் அவரது அடுத்த படைப்பான வட சென்னையை ப்பர்ர்கவும் ஆவலாக இருக்கிறேன்.

கடைசியாக வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி நீங்கள் ஆடுகளம் படத்தை வேறு எந்த மொழி படத்தையும் பார்த்து சுட்டு எடுக்கவில்லை தானே?.          

Sunday, March 13, 2011

நான் ஏன் ஒட்டுப்போடமாட்டேன்? 2


இப்பொழுது மானுட சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எயிட்ஸ் நோய்க்கு நம் அரசியல்வாதிகள் என்ன தீர்வு கண்டுள்ளார்கள்?. சொல்லுங்கள். ''அரசியல்வாதிகள் என்ன மருத்துவ ஆராய்ச்சியாளர்களா?. அவர்கள் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்கிறீர்களா?''. என்று என்னை பார்த்து கேட்காதீர்கள்.நான் அவர்களை மருந்து கண்டுபிடிக்கசொல்லவில்லை. அதை மருத்துவ ஆராய்ச்சியார்கள் பார்த்துக்கொள்வார்கள்.

நான் சொல்ல வருவது எய்ட்ஸ் நோயை தடுக்க கட்டுப்படுத்த இந்த அரசியல்வாதிகள் என்னதான் செய்தார்கள்?.புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்று விளம்பரப்படுத்தினால் போதுமா?எத்தனை அப்பாவி பெண்கள் ஏன்? சில அப்பாவி ஆண்களுமே கூடத்தான் தாங்கள் எந்த தவறுமே செய்யாமல் திருமணம் என்ற பந்தத்தால் கணவனிடம் இருந்து மனைவியோ சிற்சில இடங்களில் மனைவியிடம் இருந்து கணவனோ அந்த நோயை பெற்றுக்கொள்வதில்லை?. நம் மக்கள் திருமணத்திற்கு முன் தாங்களாகவே ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா என்ன?.

அல்லது மணமகனோ அல்லது மணமகளோ எதிர் வீட்டாரிடம் ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள முடியுமா?என்று கேட்கக்கூடிய அளவிலா நம் சமுதாய மனம் பண்பட்டு இருக்கிறது? எத்தனை எத்தனை அப்பாவிகள் இதன் மூலம் பாதிப்படைகிறார்கள்?.

இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகள் திருமணத்திற்கு முன் கட்டாயம் ஆண் பெண் இருவரும் ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றி கடுமையாக நடைமுறைபடுத்தினால் என்ன?. ஹெல்மட் சட்டம் கொண்டு வந்து அனைவரையும் ஹெல்மட் வாங்க வைக்கும் பொழுது இவர்கள் அந்த சட்டத்தை நடைமுறை படுத்துவதில் எத்தனை முனைப்பு காட்டினார்கள்?. அதைப்போலவே இதையும் செய்தால் என்ன?

சரி,இந்த சட்டத்தை கொண்டுவருவதால் இவர்களின் ஊழல் வாழ்க்கைக்கு என்ன பங்கம் வந்துவிடப்போகிறது?. சொல்லுங்கள். இப்படி அவர்கள் அரசியலுக்கு வந்த காரணமான பணம் சம்பாதிப்பது என்ற கொள்கைக்கு எந்தப்பங்கமும் வராத இதைப்போன்ற காரியங்களை கூட செய்யாத காரணத்தினால்தான் நான் ஓட்டே போடுவதில்லை. 

(தொடரும்)

Sunday, March 6, 2011

நான் ஏன் ஓட்டுப்போட மாட்டேன்?


வருகின்ற தேர்தலில் மட்டுமல்ல நான் எப்பொழுதுமே ஓட்டுப் போடுவதில்லை.எனக்கு வாக்களிக்கும் வயது வந்த பிறகு முதலில் வந்த தேர்தல் 96 ல் நடந்த சட்டமன்ற தேர்தல்தான்.நான் என் வாழ்க்கையில் அந்த தேர்தலில் மட்டுமே வாக்களித்தேன். நான் 96  தேர்தலில் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.எளிதில் யூகித்தும் கொள்ளலாம். எந்த ஒரு சிந்தனையும் செய்யாத ஒரு பெரிய அலையால் உந்தப்படும் பாமர  வாக்காளன் யாருக்கு அப்பொழுது வாக்களித்தானோ அவருக்குதான் நானும் வாக்களித்தேன்.ஏனென்றால் நானும் அப்போது ஒரு பாமரந்தானே!. எந்த ஒரு சிந்தனை வளர்ச்சியும் இல்லாத வாசிப்பு என்பதையே அறியாதவன் நான்.

அதற்கு பிறகு வந்த தேர்தல்களில் தான் நான் என்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தேன்.அந்த தேர்தல்களில்ளெல்லாம் ஒட்டு போட வாக்குசீட்டுதான். மின்னணு இயந்திரம் இல்லை.எனக்கு எந்த கட்சியையும் பிடிக்காத காரணத்தால் எனது ஓட்டை செல்லாத ஓட்டாக போட்டுக்கொண்டிருந்தேன். அதாவது எல்லா சின்னத்திலும் முத்திரை பதித்து செல்லாத ஓட்டாக மாற்றிவிடுவது.அதன் பிறகு அது முடியாமல் போய் விட்டது.இயந்திரம் வந்து விட்டதால் அப்படி செல்லாத ஓட்டாக எனது ஓட்டை போடமுடியவில்லை.அதிலிருந்து நான் வாக்களிக்கவே செல்வதில்லை.

எனது நண்பர்கள்,''அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல் செய்கிறார்கள் . அதனால் தான் நான் வாக்களிக்க செல்வதில்லை என்று என்னை எண்ணுகிறார்கள்.ஆனால் அது தவறு.நான் வாக்களிக்க செல்லாதற்கு காரணம் அரசியல் வாதிகளின் ஊழல் அல்ல. மனிதர்களின் அடிப்படை குணங்களை நான் நன்றாகவே அறிவேன். தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டன். என்று பழமொழி கூட உள்ளது.    

மனிதர்களில் எத்தனைபேர் மகாத்மாவாக இருக்கிறார்கள்?.ஊழல் செய்யாமல் இருப்பதற்கு. இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே எடுத்துக்கொண்டால் அப்படிப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆகையால் இங்கு தேர்ந்தேடுக்கக்கூடியவர்களை தூய்மையை  அடிப்படையாய்  வைத்து தேர்ந்தேடுக்ககூடாது.அது முடியவும் முடியாது.அப்படியே நீங்கள் தேர்ந்தெடுக்க முற்ப்பட்டால் இப்பொழுது யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?.கருணாநிதி ஊழல் செய்து விட்டார் ஆகையால் அவரை தேர்ந்தெடுக்க முடியாது.சரி. வேறு யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?. ஜெயலலிதாவையா?.

ஜெயலலிதா என்ன  காந்தியின் பேத்தியா?. (நேர்மையில்).இல்லையே.அவரும் ஊழல் வாதிதானே?பிறகு வேறுயாரை?  விஜயகாந்தையா?. அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் காந்தியின் பேரன் கணக்காகவா இருக்கிறது?இல்லையே. அவரை சூழ்ந்துள்ள அவரது தொண்டர்கள் எதற்காக இருக்கிறார்கள்?மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தே  தீர வேண்டும் என்ற காரனத்திற்காகவா? இல்லையே.பிறகு வேறு யாராவது இருக்கிறார்களா?. வேறு என்னதான் செய்வது?. எந்த அடிப்படையில்தான் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது.

மீண்டும் சொல்கிறேன் எனக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை இல்லை.மனிதர்கள் தங்கள் அடிப்படை குனாதிசியங்காலால் சுயநலவாதியாகவும் , தானே அனைத்தையும் உண்டு கொழுப்பவனுமாகவே இருப்பான். அது எந்த அரசியல் அமைப்பாக இருந்தாலும் சரி. கம்யூனிசம் உட்பட!. மகாத்மா காந்தி போன்றவர்கள் விதிவிலக்கு. அனைவருமே மகாத்மாக்களாகவே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன?. இருக்கமாட்டார்கள்.இருக்கவும் முடியாது.அது இயற்கை.

நான் இதுவரை எந்த ஒரு சாலை விபத்திலும் சிக்கியதில்லை.நமது சாலை விதிகளின் படி இடது புறமாகத்தானே செல்லவேண்டும்?. சமீபத்தில் நான் எனது மோட்டார் சைக்கிளை எடுத்து ஸ்டார்ட் செய்து சாலையின் இடது புறமாக  செல்ல எத்தனிக்கும் போது  நேர் எதிராக ஸ்கூட்டரில் ஒரு விடலை பையன் படுபயங்கரமான வேகத்தில் வந்து ஏன் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டான்.எனக்கு ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.நானே பருமனான ஆள்.எனது மோட்டார் சைக்கிளும் எடை அதிகமானது.அவன் என் மீது மோதிய வேகத்தில் எனது வண்டி நேர் எதிர் புறமாக திரும்பி கீழே விழுந்து விட்டது. போர்க்,மர்காட்  எல்லாம் உடைந்து நாசமாகியது.

எங்கள் ஊரில் (ஊர் பெயரை சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த பிளாக்கில் என்னை யாரென்று வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை). பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ஒரு பெரிய ரவ்ண்டானா . அந்த ரவுண்டானா எப்போதுமே போக்குவரத்து நேரிசளுடனேயே இருக்கும். அங்கு எப்போதுமே சிக்னல் வேலை செய்யாது.
பொலிசாரும் இருக்கமாட்டார்கள். அப்படியே போலிஸ் இருந்தாலும் வேலை செய்யாமல் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.அப்படியே  தப்பி தவறி வேலை செய்தாலும் ஒரு ரோட்டை நிறுத்தி மறு ரோட்டில் வருபவர்களை விடாமல் இரு சாராரையும் வரச்சொல்லி கையை காண்பிப்பார். இரு சாராரும் வந்து மோதிக்கொண்டும்  ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் செல்வார்கள். இந்த போலீசார் வேலை செய்யாமல் இருந்தாலே புண்ணியமாக இருக்கும் நாங்களே எப்படியோ விழுந்தும் கேட்டும் சென்று விடுவோம்.

நான் அலுவலகத்திற்கு எப்போதுமே பதினோரு மணிக்குதான் வருவேன்.ஏனென்றால் அப்பொழுதான் சாலையில் நெரிசல் குறைந்திருக்கும்.மேலை நாடுகளில் கூட போக்குவரத்து நெரிசல் உள்ளதுதான்.ஆனால் அதற்கும் நம் நாட்டிலுள்ள  போக்குவரர்த்து நெரிசலுக்கும் வித்தியாசம் உள்ளது.  அவர்கள் யாரும் ராங் ரூட்டிலோ அல்லது இருபது  கி மீ வேகத்தில் செல்லக்கூடிய இடத்தில் என்பது கி மீ வேகத்திலோ செல்வதில்லை.

ஆனால் நம் நாட்டில் கார் ஓட்டுபவர்களும் ;மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களும் பொதுச்சாலையில் ஓட்டுபவர்களை போலவா ஓட்டுகிறார்கள்?. பார்முலா 1  ரேசில் ஓட்டுபவர்களை போல் அல்லவா ஓட்டுகிறார்கள். இப்படிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உலவும் சாலையில் நான் எப்படி சீக்கிரம் அலுவலகத்திற்கு வரமுடியும்?.

சாலையில் மற்றொரு மிக முக்கியமான மற்றும் கேவலமான இடையூறு நாய்கள்.இந்த நாய்கள் எல்லாம் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்து ரொட்டி பாயும் என்று அந்த கடவுளுக்கே தெரியாது.இப்படிதான் ஒருமுறை நான் சாலையில் சென்று கொண்டிருக்கிறேன்.எனக்கு முன்னால் ஒருவர் தன் மனைவியை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமரவைத்து கூட்டி செல்கிறார்---- நம்  ஊர் பெண்கள் சர்கஸில் இருக்க வேண்டியவர்கள்.டூ வீலரில் இரண்டு  பக்கம் கால் போட்டு பின்னல் அமர்ந்தால்தான் ஓட்டுபவருக்கு எளிதாக இருக்கும்.சுதாரிக்கவும் முடியும்.ஆனால் நம் பெண்கள் என்ன செய்கிறார்கள்.ஒரு சைடாக அமர்ந்து அதுவும் கையில் குழந்தையுடன் அப்பப்பா 
என்ன அபாயகரமான பயணம்?---அவர்களின் குறுக்கே திடீரென ஒரு நாய் பாய்ந்து விடுகிறது.அவரால் சுதாரிக்க முடியாமல் வலது புறமாக விழுந்து விடுகிறார்கள். அப்பொழுது அவ்வழியே வந்த மினி பஸ் அவர்கள் இருவரின் தலைமீது ஏறிவிடுகிறது. ஸ்பாட் அவுட் .யாரால் நாயால்.

இந்த சின்ன சின்ன விசயங்களில் கூட ஏன் இந்த அரசியல் வாதிகள் சரி பண்ண மாட்டேன் என்கிறார்கள்?.இந்த விசயங்களை சரி செய்வதால் அவர்களுக்கு என்னதான் நஷ்ட்டம் வந்துவிடப்போகிறது?.இதை சை செய்வதன் மூலம் அவர்கள் ஊழல் வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வந்து விடப்போவதில்லையே.

(தொடரும்)     

Sunday, February 27, 2011

நான் தமிழ் நாட்டை விட்டு ஓடப்போகிறேன்.


ஆம்.நான் தமிழ் நாட்டை விட்டு சீக்கிரமாக ஓடி விடலாம் என்று இருக்கிறேன்.சமீப காலமாக நான் எனது நண்பர்களிடம் ''விஜய் முதலமைச்சரானால் நான் தமிழ் நாட்டை விட்டு ஓடி விடுவேன்.'' என்று கூறி வந்தேன். ஆனால் இப்பொழுது விஜய் முதலமைச்சர் ஆகாவிட்டாலும் ஓடிவிட்டாலும் ஓடிவிடலாம் என்று இருக்கிறேன்.அதற்கான காரணம் விஜய் பேசிய பேச்சு.

இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்து நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய பேச்சு என்னை உடனடியாக தமிழ்நாட்டை விட்டு ஓடும்படியான எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது.''நான் அடிச்சா தாங்க; மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட; வீடு போயி சேரமாட்ட . என்று தனது மேடைப்பேச்சில் கூறியிருக்கிறார். அய்யய்யோ எப்படிங்க இதையெல்லாம் கேட்டுகிட்டு இருக்கிறது?.

இதையெல்லாம் கூட சகித்துக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மற்றொன்று கூறினார்.அதை இங்கு எழுதவே கை வரவில்லை. ரசிகர்களை பார்த்து ; அதுவும் ஒரு மக்கள் பிரச்சனைக்காக போராட வந்த இடத்தில் '' என்னுடைய காவலன் படத்தில் குத்துப்பாட்டு ஒன்று கூட இல்லை என்று நீங்கள் வருத்தப்படுவது எனக்கு புரிகிறது.எனது அடுத்த படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் குத்துப்பாட்டு நிச்சயம் இருக்கும் கவலைப்படாதீர்கள்.''
என்று கூறியிருக்கிறார்.

ஒரு போராளி பேசவேண்டிய பேச்சா இது?. இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நான் எப்படீங்க இங்க இருக்கமுடியும்?
அடுத்த மாதம் கேரளாவுக்கு எனது தாயை பார்க்க போகிறேன்.அப்படியே அங்கேயே நிரந்தரமாக தங்கியும் விடுவதாகவே முடிவு செய்துவிட்டேன்.

பசித்த மானிடம் -------- கரிச்சான் குஞ்சு



தலைப்பை கூர்ந்து மற்றுமொரு முறை படித்துப்பாருங்கள். சிரிப்பு வரவில்லை?. புரியவில்லையா?. நான் இந்த நாவலை பசித்த மானுடம் என்றுதான் கேள்விப்பட்டிருந்தேன். இந்த நாவலை சிபாரிசு செய்திருந்த தமிழின் முக்கியமான விமர்சகர்களும் பசித்த மானுடம் என்றுதான் எழுத பார்த்திருக்கிறேன். ஆனால் நாவலின் பிரதியை கையில் வாங்கிப் பார்த்தவுடன் என்ன? பசித்த மானுடம் என்பதற்கு பதிலாக பசித்த மானிடம் என்று போட்டுள்ளதே.என்று ஆச்சர்யப்பட்டேன். பசித்த மானிடம் என்பதும் சரியே என்பதை பின்பே உணர்ந்தேன்.

நான் சொன்ன சிரிப்பிற்கு காரணம் பசித்த மானிடம் என்பது பசியுள்ள மானினிடம் என்றும் பொருள் கொள்ளும் படியாகவும் இருக்கிறது.அதற்கு கீழேயே கரிச்சான் குஞ்சு என்று வேறு இருப்பது இன்னும் சிரிப்பை வரவழைத்தது.(மைனர் குஞ்சு ஞாபகம் இருக்கிறதா?).

எனக்கு கரிச்சான் குஞ்சுவை அறிமுகப்படுத்தியவர் திரு . சாரு நிவேதிதா தான்.மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சாரு எதை அறிமுகப்படுத்தினாலும் அவை மிகசிறந்தவையாகவே இருக்கும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் கரிச்சான் குஞ்சு . சாரு பலமுறை கரிச்சான் குஞ்சுவை பற்றி தனது கட்டுரைகளில் சிலாகித்து கூறியுள்ளார்.

பசித்த மானிடம் நாவலை வாசிக்க எந்த சிரமும் ஏற்படவில்லை. வாசிக்க ஆரம்பித்தால் நான் ஸ்டாப்பாக செல்கிறது.வாசிப்பு சுவை குன்றாமல் கடைசி வரை உள்ளது.

நாவல் மிகசிறந்த ஆன்மீக அனுபவத்தை கொடுக்கிறது.நாவலில் மறை பிரதி ஒன்று ஒளிந்துள்ளது.என் வாசிப்பு அனுபவத்தில் பசித்த மானிடம் நாவலின் அடியோட்டமாக இந்து மெய்யானம் இருப்பதாக தோன்றுகிறது.குறிப்பாக முன்ஜென்மத்தை பற்றி. நாவல் முன்ஜென்ம பாவ தோஷங்களை பற்றி வாசகனை நம்ப செய்கிறது.அப்படி நம்ப செய்வது திட்டமிட்டோ அல்லது பிரச்சாரமாகவோ அல்ல. அது தன் அளவிலேயே அவ்வாறு அமைந்துள்ளது.

கிட்டவின் முதலாளியான செட்டியாருக்கு லூகொடேர்மா வரும் பகுதிக்கு முன்பாகவே நாவலை வாசித்துக்கொண்டிருந்த  எனக்கு லூக்கொடேர்மாவை பற்றிய எண்ணம் வந்து போய்விட்டிருந்தது.

நீங்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் லூகொடேர்மா விடிலிகோ வந்தவர்களை பார்க்கும் பொழுது முன்ஜெம பாவதோஷம் என்ற கருத்துருவம் தோன்றி மறைவதில்லை?.  லுகோ டேர்மா ஆசாமிகளை பார்க்கும் பொழுதெல்லாம்  எனக்கு முன்ஜென்ம பாவ தோஷங்களை பற்றி எண்ணமால் இருக்க முடிவதில்ல.

கணேசன் தன் உடலை மறந்து மனதிலேயே வாழ்வதை மிகவும் நுட்பமாக சொல்லி செல்கிறார் கரிச்சான் குஞ்சு .கணேசன் கொஞ்சம் கொஞ்சமாக அடையும் ஆன்மீக முன்னேற்றத்தை பற்றியும் மிகவும் நுட்பமாக எழுதியுள்ளார்.

குறிப்பாக கடைசியில் கணேசனின் பக்கத்து வீட்டுகாரர்களை ஐந்து வீட்டுகாரர்கள் என்பதும் அந்த ஐந்து வீட்டுகாரர்களும் கணேசனை இரண்டு  நாட்களாக   காணவில்லை கணேசனை தேட வேண்டும் என்பதும் எனக்கு அந்த ஐந்து வீட்டுகாரர்கள்  ஐம்புலன்கள் என்பதாகவே எண்ண செய்கிறது.

கணேசனின் நேர் எதிர் பாத்திரமாகவே கிட்டாவின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கணேசன் லவ்கீக வாழ்க்கையில்  தோல்வியடைந்து ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். கிட்டா லவ்கீக வாழ்க்கையில் வெற்றி பெற்று ஆன்மீக வறட்சியில் சிக்கி தனது அந்திம காலத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் ஆகிறான்.

நாவலில் வரும் அனைத்து கதை மாந்தர்களும் நன்றாகவே இயல்பாக படைக்கப்பட்டுள்ளார்கள்.கிட்டவின் அண்ணன் சாமா காரியக்கிறுக்கனாக இருப்பதை அருமையாக கரிச்சான் குஞ்சு சொல்லியிருக்கிறார்.அம்மு , மாச்சி,சிங்க ரவுத்தே முதலிய கதை மாந்தர்களும் மிக்கவும் நுட்பமாக படைக்கப்பட்டுள்ளார்கள்.

நாவலில் எனக்கு குறையாக தோன்றுவது வேகமான ஓட்டம். ஏன்  இப்படி கரிச்சான் குஞ்சு ஓடுகிறார்?என்று தெரியவில்லை. சில இடங்களில் கொஞ்சம் நிறுத்தி நிதானித்து சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.

என அளவில் பசித்த மானிடம் நாவல் தமிழ் நாவல்களில் மிகமுக்கியமான இடத்தை பெற்றுள்ளது. 
எனது பெயரை கரிச்சான் குஞ்சுவின் குஞ்சு என்று வைத்துக்கொள்ளுமளவுக்கு நாவல் எனக்கு பிடித்துள்ளது.            

ஒரு எழுத்தாளரும், ஒரு இயக்குனரும்


அந்த மாநிலத்தின் முதலமைச்சர்களை உற்பத்தி செய்து தரக்கூடிய அம்மாநிலத்தின் திரைப்படத்துறையை சார்ந்த பிரபலமாக இருக்கக்கூடிய  மற்றும் அம்மாநில மக்களின் அறிவுஜீவி இயக்குனர்கள் என்று பெயரெடுத்த இயக்குனர்கள்        ஐந்தாறு பேர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு இயக்குனருக்கு சொந்தமான அனைத்து வசதிகளும் அமையப்பெற்ற பங்களாவில் ஒன்று கூடியிருந்தனர்.
அந்த குழுவில் இருந்த மூத்த இயக்குனரும் அந்த நாட்டின் தேசிய மொழியில் அதிக படங்களை மணியாக  எடுத்தவருமான அந்த இயக்குனர்தான் முதலில் ஆரம்பித்தார். '' நான் ஏன் உங்களை எல்லாம் இங்கே வரச்சொல்லியிருக்கேன் தெரியுமா?''. என்று  கேட்டார்.
மற்ற இயக்குனர்கள் தயங்கியவாறு ''தெரியவில்லை'' என்றார்கள்.
இயக்குனர் வந்தியத்தேவன் மட்டும் '' அனேகமாக அந்த எழுத்தாளனை பற்றி பேசத்தான்னு நினைக்கிறேன்'' என்றார் ரெமி மாட்டினை சுவைத்தபடி.
கரெக்ட் இதுக்குதான் இதுக்குதான் நம்ம வந்தியத்தேவனை போல எல்லோரும் வாசிக்கவேண்டும் என்கிறது. பாருங்க நான் என்ன சொல்ல போகிறேன் எதுக்காக உங்களை இங்கே வரசொன்னேன்னு கரெக்ட்டா சொல்றார் '' என்றார் அந்த தேசிய மொழி மற்றும் தனது மாநில மொழி உட்பட நான்கு மொழிகளில் ஊத்திக்கொண்ட படத்தை எடுத்த மூத்த இயக்குனர்.
" யாருங்க இந்த எழுத்தாளன் கண்ணாயிரம் பெருமாள சொல்றீங்களா?'' என்றனர் மற்ற இயக்குனர்கள்.
'' ஆமாம் அவனைத்தான் சொல்லுறேன்.அந்த நாயி ஒழுங்கா கதைகள எழுதிக்கிட்டு இருக்க வேண்டியதுதான.பெரிய சினிமா விமர்சகனாமா தாயோளி எடுக்கற படத்தையெல்லாம் திட்டுறான் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் பெரிய புடுங்கியா? இவன். நாம எவ்வளவு கஷ்டப்பட்டு படத்த எடுக்கறோம்.(எவ்வளவு கஷ்டப்பட்டு சுட்டு எடுக்கறோம் ) இவன் பாட்டுக்கு காலை ஆட்டிக்கிட்டு படத்தை பாத்து விட்டு நோகாம விமர்சனம்கிற பேர்ல படத்த தாளிச்சு எடுக்கிறான்.இவன் ஒரு படத்த எடுத்து பார்த்தான தெரியும் கஷ்டம்.தாயோளி '' என்று கோபத்தின் உச்சிக்கே சென்று கொண்டிருந்தான் வந்தியத்தேவன். முன்னாலிருந்த உடைக்கப்படாத ரெமி மார்ட்டினை வந்தியத்தேவன் கையிலெடுத்த பொழுது
அந்த மூத்த இயக்குனரின் உதவி இயக்குனர் '' அந்த பெருமாள் நாம எடுக்கிற ஒரு சில படங்களை பாராட்ட தவறுவதில்லையே! '' என்றான்.தயக்கமாக தனது குருநாதரை பார்த்தபடி.
''மசிரு எதோ ஒரு படத்த பாராட்டிட்ட போதுமா? மீதி படத்தையெல்லாம் என்ன செய்வதாம்'' என்றான்.வந்தியத்தேவன் அடுத்த ரவுண்ட் ரெமியை ஆரம்பித்தவாறு.
'' சரி இதற்க்கு என்னதான் செய்யலாம்? அவனை ஒருதடவையாவது அவமான படுத்தனும் அப்பத்தான் ஏன் மனசு ஆறும் '' என்றார் மூத்த இயக்குனர். அவரின் கோபமும் நியாயமானதே.இயக்குனரின் கடைசிபடத்தை பற்றிய பெருமாளின் விமர்சனத்தை படித்தால் தெரியும்.
சோபாவில் சாய்ந்தபடியே கால்களை ஆட்டியபடி வந்தியத்தேவன் '' நான் ஒரு திட்டம் வைத்துள்ளேன்.'' என்றான்.
''என்ன திட்டம் என்றார்'' மூத்த இயக்குனர்.
''இப்ப பெருமாள் தனக்கு பிரபல்யம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறான்.''
'' இப்பவே பிரபலமாதானே இருக்கான்''
'' நான் அதை சொல்லவில்லை.அவன் பிரபலமாக தெரிந்தவனாக இருப்பது அறிவு ஜீவிகள் வட்டத்தில் தானே?. ஆனால் அவன் பிரபலமாக ஆக நினைப்பது வெகுஜன மக்கள் மத்தியில். அதாவது நம்மை போல்.அதற்காக தனது முகத்தை மக்களின் மனதில் பதிய வைக்க நினைக்கிறான்.மேலும் வெகு ஜன பத்திரிக்கையிலும் எழுத ஆர்வமாக இருக்கிறான்''.
''எதற்கு? அவனுக்கும் ஆசை வந்து விட்டதா?''
'' இல்லை இல்லை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.அவனாவது அப்படி ஆசைபடுவதாவது.அவன் ஆசையெல்லாம் தன்னுடைய கருத்தை மக்களிடம் சேர்ப்பதுதான்.அதற்காகவே அவன் வெகுஜன பத்திரிகையில் எழுதவும் டிவி.சினிமா போன்றவற்றில் தனது முகத்தை காட்ட விரும்புகிறான்''.
'' ஓ அப்படியா"'
''உன்னுடைய திட்டம் என்ன''
'' அவன் எப்படியாவது சினிமாவில் தலையை காட்டவேண்டும் என்று நினத்துக்கொண்டிருக்கிறான்.அதை வைத்தே அவனை நான் மடக்கப்ப்போகிறேன் பொறுத்திருந்து பாருங்கள்''
''பார்க்கலாம்"
********
கண்ணாயிரம் பெருமாளின் செல்போன் ஒலித்தது.கலா கவுமுதிக்காக கட்டுரை எழுதிக்கொண்டிருந்த பெருமாள் போனை சைலன்ட் மோடில் போட மறந்ததை எண்ணி எரிச்சலுடன் போனை எடுத்துப்பார்த்தான்.பதிவு செய்யப்படாத
எண்ணாக இருந்தது.அரைமனதுடன் ஆண் செய்து ''ஹலோ'' என்றான்.
'' சார் நான் சினிமா டிரெக்டர் வந்தியத்தேவன் பேசுகிறேன்''
''ஓ ''
'' சார் கொஞ்சம் பேச வேண்டும் ஒரு அப்பாயின்ட் மென்ட் கிடைக்குங்களா? இப்ப ஏதாவது தொந்தரவு செய்திட்டங்க்களா?''
"அதெல்லாம் ஒண்ணுமில்லை.என்னங்க ஏதாவது விசயமா?''
''இல்லைங்க சார் உங்க விமர்சனமெல்லாம் படித்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.அதான் உங்ககிட்ட பேசலாம் என்று...''
''ஓ பேசலாமே.எங்க சந்திக்கலாம்?''
''சார் உங்களுக்கு எங்க சவுகரியமோ அங்க சந்திக்கலாம்.எனது ஆபீசில் கூட சந்திக்கலாம் பேச கொள்ள வசதியாக இருக்கும்.''
''ஓகே.அங்கேயே சந்திக்கலாம். எப்ப வரட்டும்?''
''உங்க இஷ்டம் . நான் எப்பொழுதும் ப்ரீதான்.''
''சரி,இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வருகிறேன்.''
*****
வந்தியத்தேவன் தனது உதவியாளர்களுடன் தனது அலுவலத்தில் டேபிள் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தான்.''குழந்தைங்களா இன்னைக்கு நைட் எழுத்தாளர் கண்ணாயிரம் பெருமாள் நம்ம ஆபீசுக்கு வருகிறார். சரக்கு சைட் டிஷ் எல்லாம் வாங்கனும்.வாங்கி வெச்சுடுங்க.''என்றார்.
''என்ன சொல்லறீங்க சார்? உங்களுக்குதான் அந்த ஆளை பிடிக்காதே. ராசி ஆகிட்டீங்களா?'' என்றான் ஒரு உதவி இயக்குனன்.
தனது திட்டமெல்லாம் தனது உதவிகளுக்கு தெரியக்கூடாது என்று நினைத்த வந்தியத்தேவன் '' ஆமாம்பா அவர் சரியாதான எழுதறார்.நாம தான் அவரை தவறாக புரிந்துகொண்டோம்'' என்றான்.
வந்தியத்தேவனின் உதவியாளர்களில் ஒருவனும் பெருமாளின் தீவிர வாசகனுமான உதவி இயக்குனன் இளமாறன்''இப்பவாது புரிஞ்சுக்கிடீங்களே சந்தோசம்'' என்றான்.
சரியாக இரவு ஒன்பது மணிக்கு பெருமாள் வந்தியத்தேவனின் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்கினார்.நீல நிற ஜீன்சும் ,தென்னை மரம் போட்ட அறிக்கை சட்டையும் அணிந்து படு ஸ்மார்ட்டாக இருந்தார் கண்ணாயிரம் பெருமாள்.
வந்தியத்தேவன் தனது உதவியாளர்களுடன் வாசலுக்கே வந்து பெருமாளிடம் கைகுலுக்கி வரவேற்று உள்ளே அழைத்துசென்றார்.வந்தியத்தேவன் தனது வாசிக்கும் அறைக்கு அழைத்துசென்று பெருமாளை அமரவைத்தார்.
அறையில் நூற்றுக்கனகான புத்தகங்கள் இருந்தன. நிறைய புத்தகங்கள் டேபிள் மீதும் சோபா மேலும் தரையிலும் பிரிக்கப்பட்டும் புக் மார்க் செய்யப்பட்டும் கவிழ்த்தியும் கிடந்தன.
''வெரிகுட் நிறைய படிப்பீங்க போலருக்கு'' என்றார் பெருமாள்.
ஆமாம் சார் என்றவாறே தான் படித்த படிக்கும் புத்தகங்களை பற்றி பெருமை பொங்க கூற ஆரம்பித்தார் வந்தியத்தேவன். அவை அனைத்துமே  பெருமாள் முப்பது வருடங்களுக்கு முன்னதாக வாசித்து அதைப்பற்றி பல புத்தகங்களும் எழுதியிருக்கிறார். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. வந்தியத்தேவன் இன்னும் தமிழில் எதையுமே படிக்கவில்லை என்பதையும் யுகித்துக்கொண்டார்.
''சார் உங்க விருப்பத்த நான் நிறைவேர்ருக்கிறேன் சார்'' என்றார் வந்தியத்தேவன்.
பெருமாள் புரியாமல் விழித்தார்
''ஆமாங்க சார் என்னோட அடுத்த படத்துல ஒரு குத்துப்பாட்டு வைச்சுருக்கேன்.எப்படியும் அந்த பாட்ட ஒருலட்சம் தடவையாவது டீவில காட்டிருவாங்க.உங்கள அந்த பாட்டுல நடிக்க வைக்கிறேன்.உங்க முகம் ஈசியா மக்கள் மனசுல பதிஞ்சிடும்'' என்றார்.
பெருமாள் சங்கோஜத்துடனும் சந்தோசத்துடனும் தலையாட்டினார்.
நாட்கள் சென்றன. வந்தியத்தேவன் சொன்னபடியே பெருமாளை தனது படத்தின் பாடல் காட்ச்சியில் நடிக்கவைத்தார்.
படம் வெளியாவது பல காரணங்களால் தள்ளிப்போயிற்று.அதற்குள் வந்தியத்தேவன் தான் ஒரு வேற்று மொழி படத்தை தழுவி பலவருடங்கள் முன்பு எடுத்த படம் வெளியாயிற்று. அதன் தொண்ணூறு சதவீத காட்சிகள் மூலப்படத்தை அப்படியே பிறதிஎடுக்கப்பட்டிருந்தது. வந்தியத்தேவனின் கலைத்திருட்டை பலர் கண்டித்தனர்.அனைவரும் பெருமாள் படத்தை திருட்டு என்றே விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்த்தனர்.ஆனால் மாறாக பெருமாள் அப்படத்தை போற்றி எழுதி இருந்தார்.பலரால் பெருமாளின் அந்த விமர்சனம் விமர்சனத்திற்குள்ளனது.வந்தியத்தேவன் தனது படத்தில் பெருமாளை நடிக்கவைத்ததனாலேயே பெருமாள் அந்த படத்தை புகழ்கிறார் என்று பேச ஆரம்பித்தனர்.பெருமாள் அந்த படத்தை தான் பாராட்டுவதற்கான ஒரு சில காரணங்களை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.
வந்தியத்தேவன் தனது திட்டம் பாதி நிறைவேறி விட்டதை நினைத்தது மகிழ்ந்திருந்தான்.
அதற்குள் பெருமாளின் புத்தக வெளியீடு வந்தது.தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை வந்தியத்தேவனிடம் கொடுத்து தான் புதிதாக எழுதியிருக்கும் நாவலை பற்றி பேச வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக நாவலை படித்துவிடுங்கள் என்றும் பெருமாள் வந்தியத்தேவனிடம் கூறினார். ஒரு வேளை நாவலை படிக்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை விழாவிற்கு வாருங்கள் என்று கூறினார் பெருமாள்.
''இதற்காகத்தாண்ட இத்தன நாள் காத்திருந்தேன் '' என்று வந்தியத்தேவன் மனதிற்குள் நினைத்துக்கொண்டே வருகிறேன் பெருமாள் .வசியம் நாவலை படித்துவிட்டே வந்து பேசுகிறேன் என்றார்.மர்ம புன்னகையுடன்.
*******
பெருமாளின் லட்ச்சியம் இலக்கிய கூட்டங்களுக்கு மக்கள் அதிகம் வரவேண்டும் என்பது.தனது புத்தகங்கள் மட்டுமல்லாமல் தமிழில் வெளி வரும் அனைத்து தீவிர இலக்கிய  புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் விற்க வேண்டும் என்பதாகும்.பெருமாளின் புத்தக வெளியீட்டிற்கு கடந்த வருடம் வந்திருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை  அதிகமான காரணத்தால் சென்ற வருடம் வந்திருந்தவர்களில் பாதிபேர் விழாமுடியும் வரை இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே இருந்தனர்.இது பெருமாளுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்துவிட்டது. இதை மனதில் வைத்தே பெருமாள் இந்த முறை இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் பெரிய அரங்கை ஏற்பாடு செய்திருந்தார்.
பெருமாளின் பதிப்பாளர் ''இவ்வளவு பெரிய அரங்கமா?அத்தனை பேர் வருவார்களா? என்றார்.அதற்கு பெருமாள் ''அரங்கம் நிறைவது எனக்கு முக்கியமில்லை அனைவரும் அமரவேண்டும் என்பதே என்றார்.
விழா இனிதே துவங்கியது முதலாவதாக பெருமாளின் நூல் வெளியீடு நிகழ்ந்தது.பிறகு நூல்களை பற்றி ஒவ்வொருவராக  பேச ஆரம்பித்தனர்.வந்தியத்தேவன் மூன்றாவதாக பேச அழைக்கப்பட்டார்.மைக்கை பிடித்ததும் வந்தியத்தேவன் தான் கடைசியாக எடுத்த படத்தை பற்றி அரை மணி நேரம் பேசினார். கூட்டத்தில் இருந்தவர்கள் இதை எதுக்கு இங்க பேசி கொல்லுகிறார் என்று முனுமுனுக்க ஆரம்பித்தனர்.
சாவகாசமாக  பெருமாளின் நாவலை பற்றி வந்தியத்தேவன் பேச ஆரம்பித்தார்.''நான் நாவலை இன்னும் படிக்கவில்லை என்றதும் பெருமாள் ஆச்சர்யத்துடன் வந்தியத்தேவனை பார்த்தார்.வந்தியத்தேவன் தொடர்ந்தான்,''நான் இன்னும் நாவலை படிக்கவில்லை.ஆனால் நாவலை புரட்டிக்கொண்டிருக்கும் போது ஒரு வரியை பார்த்தேன்.முடிவு செய்து விட்டேன்.எனக்கெல்லாம் எத்தனை ஆயிரம் பக்கமுள்ள புத்தகமாக இருந்தாலும் அந்த புத்தகத்திலுள்ள ஒரு வரியை இல்லை ஒரு வார்த்தையை இல்லை இல்லை ஒரு எழுத்தை படித்தாலே போதும் அந்த புத்தகத்தை பற்றி முழுதும் தெரிந்து விடும்.பள்ளிக்கூடத்திலேயே ஒரு வருடம் படிக்கவேண்டிய பாடங்களை ஒரே நாளில் படித்து விடுவேன்.கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் வந்தியத்தேவனுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு உள்ளதா ? என்று ஆச்ச்ர்யபட்டனர்,அதற்குபிறகு வந்தியத்தேவன் பேசிய பேச்சுகள் நாவலை படித்து முடித்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.குறிப்பாக நாவலை முழுதும் படித்துவிட்டு அதைபற்றி பேச இருந்த தமிழின் முக்கியமான படைப்பாளிக்கு பெரும் கோபத்தை உண்டுபண்ணியது வந்தியதேவனின் பேச்சு.
வந்தியத்தேவன்,'' நாவலை நான் ஒரு வரிதான் படித்தேன். அது எப்படி பட்ட நாவல் என்று அந்த ஒரு வரியிலேயே புரிந்துகொண்டேன்.சந்தேகமே இல்லாமல் இந்த நாவல் ஒரு சரோஜாதேவி எழுத்துதான்.சரோஜாதேவி புத்தகம் தான் என்றார்.அனைவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை எதோ வந்தியத்தேவன் வார்த்தைகளில் விளையாடுகிறார்.இப்படி நாவலை தாழ்த்தி கூறிவிட்டு பின்பு புகழ ஆரம்பிப்பாரோ நம் முதலமைச்சரை போல என்று நினைத்தனர்.ஆனால் வந்தியத்தேவன்''இது சரோஜா தேவி புத்தகம் தான் நான் அடித்துக்கூறுகிறேன்''.என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
பெருமாளுக்கு யாரோ தன்னுடைய முதுகில் தனக்கு தெரியாமல் நான்கு அடி நீளமுள்ள கத்தியை இறக்கியது போலிருந்தது.
*******
அதே கடற்கரை பங்களா.அதே இயக்குனர்கள் மத்தியில் வந்தியத்தேவன் வெற்றி களிப்புடன் கம்பீரமாக வீற்றிருந்தான்.அனைத்து இயக்குனர்களும் மாறி மாறி வந்தியதேவனை புகழ்ந்து கொண்டிருந்தனர்.
சூபர்ப் வாவ் பின்னிட்டே வந்தியா '' சரி இப்ப பெருமாள வச்சி ஒரு பாட்டு எடுத்தியே அதை என்ன செய்யப்போற?''
''ஹா ஹா ஹா ''  என்று இளித்துக்கொண்டே என்னைத்திட்டி இப்பொழுது அவனுடைய வெப்சைட்டுல எழுதிக்கிட்டு இருக்கான்.ஆனா அவன் நடிச்ச பாட்டில இருந்து அவனை நீக்கமா அப்படியே அவனை திரையில காட்டப்போறேன்.இதிலையும் அவனுக்கு அடிதான் எல்லோரும் நினைப்பாங்க பெருமாள் வந்திய தேவன இப்படி திட்டி எழுதறான் ஆனா பாருங்க வந்தியத்தேவன் எப்படி மனித தன்மையோட நடந்துக்கிறார் . பெருமாள் தன்னை திட்டுவதை கூட பொருட்படுத்தாம பெருமாள் நடிச்ச சீனை கட் பண்ணாம வச்சுருக்கார்.அவரல்லவோ மனிதன் என்று. எல்லோரும் பேச போறாங்க '' என்றார் வந்தியத்தேவன்.
''நீ கவி சாபத்துக்கு ஆளாயிட்ட  பார்க்கலாம் ''  என்று வந்திய தேவனிடம்  சொல்ல முடியாமல் மனதிற்குள் நினைத்துக்கொண்டான் உதவி இயக்குனன்.

Tuesday, February 1, 2011

மைனா ---- வாழ்வின் தரிசனம்


இந்த ப்ளொக்கில் தமிழில் வெளிவரும் தீவிர சினிமாவை பற்றி (அப்படி வருகிறதா என்ன?) மட்டுமே எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.நடுவாந்திர சினிமாவைக்கூட எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். நடுவாந்திர சினிமா என்றால் என்ன? என்ற கேள்வி உங்களுக்கு வருமானால் நீங்கள் இந்த ப்ளோக்கை படிப்பதை தயவு செய்து நிறுத்திவிடுங்கள்.

அப்படி இருந்து வந்த என்னை ஒரு நடுவாந்திர தமிழ் சினிமா மாற்றி அதைப்பற்றி எழுத வைத்துவிட்டது. அது இந்த பதிவின் தலைப்பிலுள்ள சினிமாதான். ஆம் மைனாவேதான்.

எனக்கு சோசியல் போபியா என்ற ஒருவகையான மனநோய் இருப்பதனால் திரையரங்கிற்கு சென்று சினிமா பார்க்க முடியாத நிலைமையில் இருக்கிறேன்.ஆகையால் DVD  யில் தான் பார்த்தேன். அதற்காக நான் தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நல்ல பிரின்ட் உள்ள DVD , சினிமா வெளிவந்து இரண்டு மாதங்கள் கழித்துதான் கிடைக்கும் என்ற காரணத்தால் இரண்டு மாதம் கழித்து இப்பொழுதுதான் படத்தை பார்க்க நேர்ந்தது.

மைனா படத்தின் பாடல் வெளியீடு விழாவில் படத்தின் கிளிப்பிங்க்சையும் மற்றும் இயக்குனரையும் பார்த்த பொழுது இப்படம் ஒரு தோல்வி படமாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தோல்வி படம் என்றால் கலைப்படைப்பில் மட்டுமே தோல்வியாக இருக்கும். மற்றபடி வசூலில் நிச்சயமாக வெற்றிபெறும் என்று எண்ணியிருந்தேன். 

அதென்ன தோல்வியடையும் கலை?. (இதைக்கூட சொல்லனுமா ?) சொல்கிறேன் . பருத்திவீரன் வந்ததா? வெற்றியடைந்ததா? அதுஒரு நடுவாந்திர சினிமா அதையோற்ரி சுப்பிரமணிய புரம் வந்ததா? அதுவும் ஒரு வெற்றி பெற்ற நடுவாந்திர சினிமா. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நான் சொல்லும் வெற்றி என்பது கலையம்சத்தில் மட்டுமே. வசூலில் வெற்றி என்பதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 

நம் இயக்குனர்கள் என்ன செய்தார்கள்? இந்த இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு இவர்களும் ஆரம்பித்தார்கள் வரிசையாக வெண்ணிலா கபடிகுழு,மாயாண்டி குடும்பத்தார்,களவாணி........   இப்படி இந்த படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றிருக்கலாம் . ஆனால் கலை தன்மையில் தோல்வியே.

ஆம் நானும் மைனாவை இந்த வரிசையில் வரும் மற்றொரு படம் என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் என்ன சொல்வது? பாதி படம் பார்க்கும் பொழுதே இயக்குனரை கட்டிப்பிடித்து முத்தம் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அற்புதம் அற்புதம்.ஆஹா இதுவல்லவோ சினிமா சங்கர் , மணிரத்னம் அப்புறம் அந்த ஆஸ்கார் நாயகன் போன்றவர்களெல்லாம் பிரபு சாலமனின் காலை கழுவி அந்த தண்ணீரை குடிக்கவேண்டும் . அப்பொழுதாவது புத்தி வருகிறதா என்று பார்க்கலாம்.

எந்த சந்தேகமும் இல்லாமல் கடந்த பத்து ஆண்டுகளில் இப்பொழுது துவங்கியுள்ள இந்த பத்தாண்டில் இதை போன்ற சினிமா வருமே என்பதே சந்தேகம் தான்.முதலில் நடிகர்களை பற்றி சொல்ல வேண்டும். தமிழ் சினிமா உலகில் ஒரு பேச்சு இருக்கிறதே சினிமாவில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள் என்று . அதையே தான் நானும் இப்படத்திற்கு சொல்ல வேண்டியுள்ளது. 

பிரபு சாலமனின் இயக்கத்திற்காக பாராட்டுவதை விட அவரின் கதைக்காக பவர்புல்லான சத்தான கதைக்காக பாராட்ட வேண்டும். அற்புதம் ஒரு தீவிர இலக்கிய வாதியின் எழுத்திற்கு சமமாக உள்ளது.அதில் படைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் மிகவும் படைப்பூக்கத்துடன் படைக்கப்பட்டுள்ளது.அதை எப்படி .....சொல்வதென்று தெரியவில்லை.

ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் சூழ்நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்லவர்களாகவும் மற்றவர்களுக்கு கெட்டவர்களாகவும் அல்லது இந்த பொருளாதார வாழ்க்கை சூழலால் நெருக்கடிக்குள்ளான சுயநல வாதிகளாகவோ இருக்கிறார்கள். இதைப்போன்ற ஒரு படைப்பை கொடுக்க படைப்பாளிக்கு வாழ்க்கையின் மீதான மற்றும் மனிதர்களின் மீதான அவதானிப்பு எவ்வளவு கூர்மையாக இருக்க வேண்டும் என்பதை உணரவேண்டும்.

உதாரணத்திற்கு மைனாவின் அம்மா கதாபாத்திரத்தையே எடுத்துக்கொள்வோம். கணவனால் கைவிடப்பட்ட அவள் வறுமையில் உழலும் பொழுது தன் மகளும் தன்னை போல ஆகி விடக்கூடாது என்ற காரணத்தாலேயே மைனாவின் காதலை வெறுக்கிறாள் . தன் மகள் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற காரணமே ஒழிய சாதிப்பிரச்சனையோ அல்லது மாறாதோ அல்ல.இந்த காட்ச்சிகளை சொல்லியிருக்கும் விதம் மிக யதார்த்தம்.

3D  சினிமாவில் காட்ச்சியில் பார்வையாளர்களும் காட்ச்சியில் நேரிலேயே இருப்பதைப்போன்று
உணர்வார்கள்.அதைப்போலவே, மைனாவிலும் உணரமுடிகிறது 3 D  படமாக இல்லாவிட்டாலும்.உதாரணத்திற்கு மூணாறில் ஹோட்டலில் சாப்பிடும் காட்ச்சியை சொல்லலாம்.இன்னும் எழுத நிறைய ....உள்ளது .ஒரே வரியில் சொல்வதென்றால் வாழ்க்கையை பற்றிய ஒரு அற்புதமான தரிசனம்.

இன்னும் ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் சினிமாவில் இப்பொழுது உயிரோடிருக்கும் மேதைகள் கூட பிரபு சாலமனை பார்த்து பொறாமை கொள்வார்கள்.