Sunday, February 27, 2011

பசித்த மானிடம் -------- கரிச்சான் குஞ்சு



தலைப்பை கூர்ந்து மற்றுமொரு முறை படித்துப்பாருங்கள். சிரிப்பு வரவில்லை?. புரியவில்லையா?. நான் இந்த நாவலை பசித்த மானுடம் என்றுதான் கேள்விப்பட்டிருந்தேன். இந்த நாவலை சிபாரிசு செய்திருந்த தமிழின் முக்கியமான விமர்சகர்களும் பசித்த மானுடம் என்றுதான் எழுத பார்த்திருக்கிறேன். ஆனால் நாவலின் பிரதியை கையில் வாங்கிப் பார்த்தவுடன் என்ன? பசித்த மானுடம் என்பதற்கு பதிலாக பசித்த மானிடம் என்று போட்டுள்ளதே.என்று ஆச்சர்யப்பட்டேன். பசித்த மானிடம் என்பதும் சரியே என்பதை பின்பே உணர்ந்தேன்.

நான் சொன்ன சிரிப்பிற்கு காரணம் பசித்த மானிடம் என்பது பசியுள்ள மானினிடம் என்றும் பொருள் கொள்ளும் படியாகவும் இருக்கிறது.அதற்கு கீழேயே கரிச்சான் குஞ்சு என்று வேறு இருப்பது இன்னும் சிரிப்பை வரவழைத்தது.(மைனர் குஞ்சு ஞாபகம் இருக்கிறதா?).

எனக்கு கரிச்சான் குஞ்சுவை அறிமுகப்படுத்தியவர் திரு . சாரு நிவேதிதா தான்.மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சாரு எதை அறிமுகப்படுத்தினாலும் அவை மிகசிறந்தவையாகவே இருக்கும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் கரிச்சான் குஞ்சு . சாரு பலமுறை கரிச்சான் குஞ்சுவை பற்றி தனது கட்டுரைகளில் சிலாகித்து கூறியுள்ளார்.

பசித்த மானிடம் நாவலை வாசிக்க எந்த சிரமும் ஏற்படவில்லை. வாசிக்க ஆரம்பித்தால் நான் ஸ்டாப்பாக செல்கிறது.வாசிப்பு சுவை குன்றாமல் கடைசி வரை உள்ளது.

நாவல் மிகசிறந்த ஆன்மீக அனுபவத்தை கொடுக்கிறது.நாவலில் மறை பிரதி ஒன்று ஒளிந்துள்ளது.என் வாசிப்பு அனுபவத்தில் பசித்த மானிடம் நாவலின் அடியோட்டமாக இந்து மெய்யானம் இருப்பதாக தோன்றுகிறது.குறிப்பாக முன்ஜென்மத்தை பற்றி. நாவல் முன்ஜென்ம பாவ தோஷங்களை பற்றி வாசகனை நம்ப செய்கிறது.அப்படி நம்ப செய்வது திட்டமிட்டோ அல்லது பிரச்சாரமாகவோ அல்ல. அது தன் அளவிலேயே அவ்வாறு அமைந்துள்ளது.

கிட்டவின் முதலாளியான செட்டியாருக்கு லூகொடேர்மா வரும் பகுதிக்கு முன்பாகவே நாவலை வாசித்துக்கொண்டிருந்த  எனக்கு லூக்கொடேர்மாவை பற்றிய எண்ணம் வந்து போய்விட்டிருந்தது.

நீங்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் லூகொடேர்மா விடிலிகோ வந்தவர்களை பார்க்கும் பொழுது முன்ஜெம பாவதோஷம் என்ற கருத்துருவம் தோன்றி மறைவதில்லை?.  லுகோ டேர்மா ஆசாமிகளை பார்க்கும் பொழுதெல்லாம்  எனக்கு முன்ஜென்ம பாவ தோஷங்களை பற்றி எண்ணமால் இருக்க முடிவதில்ல.

கணேசன் தன் உடலை மறந்து மனதிலேயே வாழ்வதை மிகவும் நுட்பமாக சொல்லி செல்கிறார் கரிச்சான் குஞ்சு .கணேசன் கொஞ்சம் கொஞ்சமாக அடையும் ஆன்மீக முன்னேற்றத்தை பற்றியும் மிகவும் நுட்பமாக எழுதியுள்ளார்.

குறிப்பாக கடைசியில் கணேசனின் பக்கத்து வீட்டுகாரர்களை ஐந்து வீட்டுகாரர்கள் என்பதும் அந்த ஐந்து வீட்டுகாரர்களும் கணேசனை இரண்டு  நாட்களாக   காணவில்லை கணேசனை தேட வேண்டும் என்பதும் எனக்கு அந்த ஐந்து வீட்டுகாரர்கள்  ஐம்புலன்கள் என்பதாகவே எண்ண செய்கிறது.

கணேசனின் நேர் எதிர் பாத்திரமாகவே கிட்டாவின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கணேசன் லவ்கீக வாழ்க்கையில்  தோல்வியடைந்து ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். கிட்டா லவ்கீக வாழ்க்கையில் வெற்றி பெற்று ஆன்மீக வறட்சியில் சிக்கி தனது அந்திம காலத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் ஆகிறான்.

நாவலில் வரும் அனைத்து கதை மாந்தர்களும் நன்றாகவே இயல்பாக படைக்கப்பட்டுள்ளார்கள்.கிட்டவின் அண்ணன் சாமா காரியக்கிறுக்கனாக இருப்பதை அருமையாக கரிச்சான் குஞ்சு சொல்லியிருக்கிறார்.அம்மு , மாச்சி,சிங்க ரவுத்தே முதலிய கதை மாந்தர்களும் மிக்கவும் நுட்பமாக படைக்கப்பட்டுள்ளார்கள்.

நாவலில் எனக்கு குறையாக தோன்றுவது வேகமான ஓட்டம். ஏன்  இப்படி கரிச்சான் குஞ்சு ஓடுகிறார்?என்று தெரியவில்லை. சில இடங்களில் கொஞ்சம் நிறுத்தி நிதானித்து சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.

என அளவில் பசித்த மானிடம் நாவல் தமிழ் நாவல்களில் மிகமுக்கியமான இடத்தை பெற்றுள்ளது. 
எனது பெயரை கரிச்சான் குஞ்சுவின் குஞ்சு என்று வைத்துக்கொள்ளுமளவுக்கு நாவல் எனக்கு பிடித்துள்ளது.            

No comments:

Post a Comment