Tuesday, March 15, 2011

ஆடுகளம் ---- பொறாமை பல்லின் விஷம்.


சோசியல் போபியாவினால் வழக்கம் போல் ஆடுகளம் படத்தையும் விடியோவிலேயே பார்க்க நேர்ந்தது. படத்தயாரிப்பாளரும் , படைப்பாளியும் மன்னிப்பார்களாக. இந்த ப்ளொக்கில் வணிகப்படங்களை பற்றிய என்னுடைய விமர்சனங்களை எழுதுவதில்லை என்ற முடிவிலிருந்து என்னை மீரா செய்த இரண்டாவது படம் ஆடுகளம்.முதல் படம் மைனா.

நான் இதுவரை பார்த்த தமிழ் சினிமாவிலேயே ; தமிழ் சினிமாவின் பிதாமகர்களின் சினிமாவை விட மிக அற்புதமான படம் ஆடுகளம்.பேட்டைக்காரன் (வ.ஐ.ஜெயபாலன்) சேவல் சண்டையில் நிபுணத்துவம் பெற்றவர்.தனது வாழ்க்கையையே சேவல் சண்டைக்காக அர்பணித்தவர். அவரின் சிஷயர்களாக  கருப்பு (தனுஷ்), துறை முதலியோர் இருக்கின்றனர். பேட்டைக்காரனின் சேவல் சண்டை எதிரியான போலிஸ் இன்ஸ்பெக்டருக்கும் , பேட்டைக்காரனுக்கும் இடையே சேவல் சண்டை நடக்கிறது.அதில் இன்ஸ்பெக்டரின் இரு சேவலிடம் மோத கருப்பு ஒரு சேவலை தேர்ந்தெடுக்கிறான். பேட்டைக்காரன் அந்த சேவலை மறுத்து அது தோற்றுவிடும் என்றும் வேறு சேவலை போட்டியில் ஈடுபடுத்துமாறு கூறுகிறார்.கருப்பு அதைமீறி தான் முதலில் தேர்ந்தெடுத்த சேவலையே சண்டைக்கு விட்டு ஜெயித்துவிடுகிறான்.

இது பேட்டைக்கரனுக்கு அவமானமாகி விடுகிறது.தன்னுடைய சிஷ்யன் தன்னைவிட திறமைசாலியாக இருப்பதை பேட்டைக்காரனின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பொறாமையால் பேட்டைக்காரன் தத்தளிக்கிறான்.ஆனால் கருப்பு 
தனது வெற்றிகளுக்கெல்லாம் தனது குருவான பேட்டைக்காரனே காரணம் என்று மனதார சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

தனது மனதில் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பேட்டைக்காரன் கருப்பின் மீது ஏக கடுப்பில் இருக்கிறான்.பல வஞ்சக செயல்கள்;துரோகங்கள் மூலம் கருப்புவை பலி வாங்குகிறான். பேட்டைக்காரனின் சூழ்ச்சியை கடைசியில் தெரிந்து கொண்ட கருப்பு பெட்டைக்கரனை பார்த்து,''ஏன் இப்படி செய்தாய்?.எனக்கு அப்பா இல்லை.உன்னை என் அப்பாவின் ஸ்தானத்தில் வைத்துள்ளேன்.என்று கூறியவுடன் பேட்டைக்காரன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போகிறான்.

கருப்பு தனது காதலியிடம் '' பேட்டைக்காரனின் சூழ்ச்சியை நான் யாரிடமும் கூறப்போவதில்லை. பேட்டைக்கரனை கொலை செய்தது நான்தான் என்று ஊர் நம்பிக்கொண்டிருக்கிறது.அப்படியே இருக்கட்டும் பேட்டைக்கரனின் பெயருக்கு  களங்கம் வரவேண்டாம்''என்று கூறுவதோடு படம் முடிகிறது.

எந்த துறையாக இருக்கட்டும் தனக்கு கீழுள்ளவர்கள் தன்னைவிட உயரத்திற்கு வரும் பொழுது அனைவர் மனதிலும் ஒரு துளியேனும் பொறாமை தீ எட்டிப்பார்க்கும்.என்ன செய்வது எத்தனை பேர் தங்கள் மனதில் பொறாமை இல்லாமல்  இருக்கிறார்கள்?.தான் பெற்ற மகனே தன்னை விட அதிகம் சம்பளம் பெறும் போது சிறிதளவேனும் பொறாமை படாதவர்கல்  இருக்கிறார்களா என்ன?.மனித மனம் எத்தகையது?. அதை எப்படித்தான் புரிந்துகொள்வதோ?.

பேட்டைகாரனிடம் கருப்பு  தான்  வெற்றி பெற்ற   பரிசு தொகையை சமர்ப்பிக்கும் பொழுது பேட்டைக்கரனின் மனம் வேறு ஒரு அவதாரம் எடுக்கிறது.இவன் தனக்கு கீழானவன் , சின்ன பையன்,இவன் ஜெயிச்ச தொகையை நாம் வாங்கக்கிக்கொள்வதா ?. என்று பேட்டைக்காரனின் மனம் தடுக்கிறது.அப்பொழுது பேட்டைக்கரனின் மனதில் தடை ஏற்படுத்தும் எது?. தன்மானமா? பொறாமையா?. ஆற்றாமையா?.

இதுவரை தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களின் மன இருளை துல்லியமாக சொல்லியபடம் எனக்கு தெரிந்து வேறில்லை. படம் தொடங்கி அரைமணி நேரம் என்னடா படம் இது?.கத்துக்குட்டிதனமான நடிப்பாக இருக்கிறதே?. என்றுதான் எண்ணியிருந்தேன்.முதல் அரைமணி நேரம் அனைத்து நடிகர்களின் நடிப்பும் மகா கேவலமாக இருந்தது.பிறகுதான் படம் அதற்கு நேர் எதிர் நிலையை எடுத்தது.

எனக்கு படத்தின் இசை சுத்தமாக பிடிக்கவேயில்லை.கேட்க மிகவும் எரிச்சலாக இருந்தது.இதற்கு நான் குறை சொல்ல  மாட்டேன்.இசையில் நுண்ணிய பிழைகள் இருந்தால் மட்டுமே இசையமைப்பாளர்கள் பொறுப்பாக முடியும்.மொத்தமாகவே படத்திற்கு பொருந்தாமல் இருக்கின்ற இசைக்கு படத்தின் இயக்குனரே பொறுப்பாவார்.

படம் மிகசிறந்த இலக்கியத்தை படித்தால் உண்டாகும் மன நெகிழ்ச்சியை தருகிறது. வெற்றிமாறனை பற்றி இணையத்தில் தேடிய பொழுது அவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் சீரியலுக்காக நூற்றுக்கணக்கான சிறுகதைகளை  படிக்கநேர்ந்தது.என்று தெரிந்து கொண்டேன்.வெற்றி மாறன் இப்படியொரு நல்ல படத்தை கொடுக்க காரணமாக அமைந்தது அவரது அந்த வாசிப்பே என்பதை உணரமுடிகிறது.  

ஆடுகளம் பார்த்ததுமே வெற்றிமாறனின் முதல் படைப்பான பொல்லாதவனை பார்த்த்துவிட வேண்டும். என்ற எண்ணம்  மேலோங்கி விட்டது.மேலும் அவரது அடுத்த படைப்பான வட சென்னையை ப்பர்ர்கவும் ஆவலாக இருக்கிறேன்.

கடைசியாக வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி நீங்கள் ஆடுகளம் படத்தை வேறு எந்த மொழி படத்தையும் பார்த்து சுட்டு எடுக்கவில்லை தானே?.          

No comments:

Post a Comment